10/19/2021

மாரியம்மன் உற்பத்தி அகவல்

 திருச்சிற்றம்பலம்

 மாரியம்மன் உற்பத்தி



 அகவல் 

ஓம் பூவினியமாதே கேளாய் உன்பொன்னடிகள் காணவந்தேன் .

 மேவிய மாரியம்மா திருவுளம் பொருந் தொண்ணாதோ 

ஆதியாய் அரன் முடிவாய் அண்டபகிரண்டமுமாய் ஐம்பத்தோராட்சரமாய் 

சோதியாய் , வெட்ட வெளியாய்ச் சொரூபமாய் நின்றவளே ,

 ஊத்துக்காடமர்ந்தவளே , உதிரபெலி கொண்டவளே 

பலவேஷம் கொண்டவளே பரசுராமனைப் பெற்றவளே

 சத்திநூற்றிருபதும் சயம்பதினாறும் மிச்சமாய் மேலாயிருந்தவளே !


 கெந்தம் , பர்வதம் , சடாமுனியும் ,

 மானொருகையும் மழுவொருகையும் ,

 சங்கொருகையும் , சக்கரமொருகையும்

 பச்சைத்திருவில்லும் பறந்தோர் வேப்பிலையும்

 இச்சையுடன் சென்றேகவரம் பெற்றவளே 

ஆதிபராபரியே , அரனுடைய தங்கையம்மா 

நாதமறவோங்காரி நற்பொருளாய் நின்றசக்தி

 தக்கன் மகளாய்த் தானுதித்த வீர சக்தி

 பின்னும் மலையரசன் பிள்ளையெனவே யுதித்தாய் ,

 அன்னநடை மாதுமை யுமருங்கிருந்தாளெங்களம்மை

 கும்பத்துமாரியென்றும் கோவிந்தன் தங்கையென்றும்

 ஏழுபேர் கன்னியென்றும் ஏகபரா சக்தி யென்றும்

 வளர்ச்சி சடைச்சியென்றும் வல்லபத்ர காளியென்றும் 

ஆழிமால் தங்கையென்றும் ஆச்சி மீனாட்சியென்றும்


துர்க்கை அபிராமியென்றும் சொல்லரிய பேய்ச்சியென்றும்

 கண்ணிலே வந்துதித்த கண்ணகைத்தாய்யம்மையென்றும் ,

 பரமன் திருவருளால் பாருலகிலே பிறந்தாய்

 அதிகதவமாக வம்மையுமை வீற்றிருந்தாள்

 வீற்றிருந்தா ளெங்களம்மன் வெகுநாள் தவமாக

 என்ன வரம் வேணுமெனக் கேட்டாரே ஈஸ்வரனார் . 

பராமல் வந்தெனக்குப் பதினெட்டு முத்துவகை

 தாராய்யெனக்கேட்டாள் தார்குள லுமப்போது 

அப்போ பரமேஸ்பரன் அன்பாய் மனதிரங்கி . 

கடுகுதிரி நெல்லுதிரி பனையேறி பொக்கிளிப்பான்


 இந்தநல்லமுத்துவகை ஈஸ்வரிக்குத்தான் கொடுத்தார் ,

 கொடுத்த நல்ல முத்துகளைக் குறையாமலே வாங்கி 

இந்த நல்ல முத்தருமை யானறியவேணுமென்று 

ஈஸ்பரனார் மேனியிலே கனக முத்தை தானெறிந்தார்

 நெருப்புத்தணலாக நின்றெரிய முத்துவகை 

அப்போபரமசிவன் அது பொறுக்கமாட்டாமல் 

பத்தினியே நீயெனக்குப் பாரமுத்தை ஏனெறிந்தாய் 

நீயேயறிந்த முத்துக்களை நீ இறக்கிவிடு பத்தினியே 

வயதுசிறு பாலகர்க்கும் வயோதிபத்தோர் தங்களுக்கும்

 இந்தநல்ல முத்துகளைப்போடாதே பத்தினியே


 வம்புகளுரைத்தோர்க்கும் வாழ்வினைக் கெடுத்தோர்க்கும்

 துன்பங்கள் செய்தோர்க்கும் தொடர்ந்து நஞ்சி யிட்டோர்க்கும் .

 கற்புஅளித்தோர்க்கும் காமிநெஞ்சோர் தங்களுக்கும் 

இந்த நல்ல முத்துகளைப் போய் எறியும் தாயாரே 

என்று வாக்குமேதான் கொடுத்தார் வரமுடைய அம்மனுக்கு 



முற்றிற்று .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக