3/14/2021

முருகன் நடத்திய திருவிளையாடல் கந்த புராண வரலாற்றுப் பகுதியில்(06) அடியார்கள் அனைவருக்கும் ஷேர் செய்யவும் பகிரவும்

முருகன் திருக்கயிலையில் வீற்றிருக்கும்போது யாவரும் வியக்கப் பற்பல திருவிளையாடல்களைப் புரிவார் .

 அவர் செய்யும் விளையாடல்கள் யாவும் தெய்வத்தன்மையை விளக்குவனவாக இருந்தன .

 வியந்த உமை யம்மையார் முருகன் பெருமையைச் சிவபெருமான் வாயிலாகச் செவி மடுத்து , இவன் பெருமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிதாதலை எண்ணி உளம் பூரித்து வீற்றிருந்தார் .

 முருகன் திருவிளையாட்டு உலகெங் கும் நிகழ்வதாயிற்று . மலைகள் இடம் பெயரும் . கடல்கள் ஒன்றாகும் . 

சந்திரன் சூரியமண்டலத்திருப்பான் . சூரியன் சந்திரமண்டலத்திருப்பான் . இத்தகைய பற்பல விளையாடல்களை அவர் புரிந்தார் . மக்கள் , உலகநிலை மாற்றத்தைக்கண்டு அஞ்சினர் . தேவர்கள் இது அசுரர் செய்கையேயாகும் என்று அஞ்சி நான்முகனிடம் சென்றனர் . நான்முகன் தேவர்களனைவரை யும் அழைத்துக்கொண்டு மேருமலையிலிருக்கும் இந்திரனிடம் சென்று தெரிவித்தனர் . 

முருகன் இளமுருகனாக ஒரு திருமுகத்துடன் அங்கும் தோன்றி மேருமலையை அசைத்தார் . கொடுமுடிகளைப் பறித்து வீசினார் . இந்திரன் முதலிய தேவர்கள் இச்செயலையறிந்து இவருடைய திருமேனியின் தெய்வ ஒளியில் ஈடுபட்டு ' அசுரர்களும் யாரும் செய்யமுடியாத இந்தப் பேராற்றலையுடையவன் இவனே ! இவன் இளைஞன் அல்லன் : அசுரரினும் கொடியன் ; இவனோடு அனைவரும் சண்டையிடுவோம் ' என்று எண்ணித் தத்தம் ஊர்திகளில் ஏறிப் படையெடுத்து வந்தனர் : பொருதனர் . யாவரும் அழிந்தனர் .

 இந்திரன் முருகனுடைய ஒருகணைக்கு ஆற்றாது சோர்ந்து வீழ்ந்தான் . முருகப் பெருமான் தனிவீரனாகப் போர்க்களத்து உலாவினார் . வியாழபகவான் நாரதமுனிவர் வாயிலாக நிகழ்ச்சிகளையறிந்து விரைந் தோடிவந்து முருகனை வழிபட்டு இறந்த தேவர்களை எழுப்பித்தந்தனர் . 

முருகன் தமது விசுவரூபதரிசனத்தைத் தேவர்களுக்குக் காட்டியருளினர் . தேவர்கள் அவ்வுருவத்தை முழுதும் காணலாற்றாது ' பெருமானே ! பேருரு வைக் காட்டியதுமட்டும் போதாது ; அதனைக்காணும் ஆற்றலையும் எமக்கு அருளுதல் வேண்டும் ' என வேண்டிக்கொண்டனர் . 

முருகன் அவ்வாறே அவர்களுக்குக் காணுங்கண்ணை அளித்தார் . தேவர்கள் கண்டு போற்றிப் புகழ்ந்தார்கள் . பின் முருகன் ஆறுமுகங்களுடைய பண்டைத் திருக்கோலங் காட்டி ஆட்கொண்டார் .

 இந்திரன் ' கருணைக்கடலே ! கந்தப்பெரும ! அசுரர்களை யழித்துத் தேவர்களைக்காத்து விண்ணுலகாட்சியைத் தேவரீரே செய்தருள வேண்டும் ' என வேண்டிக்கொண்டான் . முருகப்பெருமான் இந்திர நோக்கி ' நீ நமக்குத்தந்த அரசை நாம் உனக்கு வழங்குகிறோம் ; நாம் சேனாபதியாவோம் : நீங்கள் சேனைகளாக இருங்கள் ; அவுணர்களை வென்று அமரர்க்கு ஆக்கமளிப்போம் ' என்று கூறி , முருகன் தன் திருவிளை யாடலால் முறைபிறழ்ந்த உலகை முன்னைய நிலையெய்தத் திருவுளம்பாலித் தார் . அங்ஙனமே ஆயிற்று . 

இந்திரன் திருக்கயிலைமலைச்சாரலில் உள்ள ஒரு மலையில் ஆலயம் அமைத்து . இங்கு எழுந்தருளி எமது பூசையை ஏற்றருள வேண்டும் எனப் பணிந்தான் . முருகன் அவ்வண்ணமே எழுந்தருளிப் பூசையேற்றருளினர் . அவர் எழுந்தருளியிருந்த இடம் கந்தவெற்பு என வழங்கப்பெற்றது . முருகன் கந்தவெற்பில் நவவீரர்களும் இலக்க வீரர் களும் பூதகணங்களும் புடைசூழ வீற்றிருந்தருளினார் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக